Monday, February 05, 2007

இறைவனை கட்டுப்படுத்த முடியுமா ?

சிவமயம்

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவின் மூலம் என் இனிய இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்களின் மனதை புன்படுத்தும் நோக்கமோ அல்லது நகைக்கும் நோக்கமோ கிடையாது என்பதையும் மதிப்பிற்குறிய மரைக்காயர் ஐயார் அவர்கள் திரு எழில் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இடப்பட்டது என்பதையும் இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள் கன்னியமான சொற்பிரயோகங்களுடன் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவில் கன்னியமான சொற்களை பிரயோகிக்காத பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

டிஸ்க்கிளைமர்: இங்கே எனது வாதத்தின் மூலம் எதிர் தரப்பினர் மிகவும் கடுமையாக தாக்கப்படுவதை யாரேனும் உணர்ந்தால் தாக்கப்படுவது எதிர்க்கருத்து தெரிவித்த நபர் அல்ல அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தே என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் வணக்கம் நமது மரைக்காயர் ஐயா அவர்கள் கட்டுப்படுத்தப் படுவதா இறை? என்ற பதிவிலே பின்வருமாறு தெரிவித்துள்ளார். இந்தப்பதிவை படிக்குமுன் அனைவரும் சென்று ஒருமுறை அந்தப் பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

// "நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை"//

அதாவது இந்துக்களாகிய நாம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ சுவாமியறையில் இறைவன் திருவுருவத்தை வைத்து வழிபடுவதால் இறைவனை கட்டுப்படுத்துகிறோமாம்.

அத்தோடு நாம் இறைவனை கட்டுப்படுதுகிறோம் என்பதற்கு அவரும் வேறு சிலரும் பின்வரும் வாதங்களை முன்வைக்கிறார்கள்.

மரைக்காயர் ஐயார் இப்படி சொல்கிறார்

  • நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை

  • கோவிலில் இருக்கும் கடவுள்களில் சில கடவுள்கள் மிக சக்தி வாய்ந்தவை என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு ஊரில் இருக்கும் அதே கடவுள் சக்தி குறைந்தவர்தானே? இப்படி ஒரே கடவுளையே ஊருக்கு ஏத்த மாதிரி கோவிலுக்கு ஏத்த மாதிரி சக்தி கூட குறைச்சலா கட்டுப்படுத்தி வச்சிருக்கிறது யார்? முழுப்பிரபஞ்சத்திலும் நிறைந்திறுக்கும் கடவுள் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரி சக்தி உடையதாக இருக்க வேண்டாமா?

  • கோவில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது. காசு கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் கடவுள் தரிசனம் தருவார் என்பதும் கடவுளை கட்டுப்படுத்துவதுதான்.

அறிவுடை நம்பி ஐயா அவர்கள் பின்வறுமாறு தெரிவிக்கிறார்

  • இந்து (மட)க் கடவுளர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எதற்கு கருவறைக்குள் ஒழிந்து கொள்ள வேண்டும்?

  • ஆகமம், ஐதீகம் என்பதோடு ஐந்து ஆறு என்ற காலப்பூசைகள் எல்லாம் கட்டுப்பாடுகள் அல்லவா?

  • கட்டுப்பாடுகள் இல்லையென்றால் ஒருநாளாவது சுடலை மாடனை திருப்பதியிலும், முனியாண்டியை சபரிமலையிலும், ஐயனாரை காஞ்சி புரத்திலும் வைத்து பூசிக்க முடியுமா?

  • சூத்திரன் காலனிக்குள் பார்ப்பன சாமிகள் வந்தால் கடவுளும் தீட்டாகி விடுவான் என்றானே சுப்பிரமணி. இதெல்லாம் கடவுளைக் கட்டுப்படுத்துவதாகாதா?

ஸயீத் ஐயார் அவர்கள் பிவறுமாறு தெரிவிக்கிறார்

  • தனி மனிதர்கள் அறிவதெல்லாம் உண்மையாக முடியுமா?, அப்படியானால் கடவுள் மறுப்பாளர்களுக்கும் அவர்கள் அறிந்த உண்மைகள் உள்ளனவே அவர்களும் அவர்களறிந்த உண்மைகளின் படி கடவுள் இல்லை என்கின்றனரே அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை இந்துமதம்தான் ஏற்றுக் கொள்ளுமா?.

இவர்களுக்கு இவ்விடயங்களைப் பற்றி விளக்கவே இந்த பதிவு

ஐயா மரைக்காயர் அவர்களே முலுப்பிரபஞ்சத்திலும் பரந்து "காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கும்" பரம்பொருளை ஒரு இடத்திற்குள் அடக்கி விட முடியுமா அவன் எங்கும் இருக்கிறான், எல்லாவற்றிலும் இருக்கிறான் ஏன் என்றால் இவை எல்லாமே இறைவனது படைப்புக்கள் அவற்றில் அவனுக்கு வேறுபாடு கிடையாது. சிறிய புல்பூண்டுகள் முதல் பெரிய மரங்கள் வரை, உலகின் அனைத்து ஜீவ ராசிகளிலும் அவன் காணப்படுகிறான் அதனால் தான் இந்து மதத்தில் கல், மண், மரம், செடி, கொடி முதல் மாடுகள் வரையிலும் வணங்கப்படுகின்றன இந்த உண்மையை உணராதவர்களுக்கு இந்து மத வழிபாடுகள் ஆச்சரிமாய்த்தான் இருக்கும் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

அடுத்து கோயில்களில் உள்ள கடவுள்களின் சக்தி இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர் வேறுபடுவதென்பது இந்துக்களின் பொதுவான பேச்சு வழக்கு நம்பிக்கையே தவிர வேறொன்றும் கிடையாது, என்று இந்த பதிலை தெறிவித்ததற்கு இது எனது சொந்த கருத்து பெரும்பான்மை இந்துக்களின் கருத்து கிடையாது என்றார் மரைக்காயர் ஐயார்.

சரிதான் தனி ஒருவரின் கருத்து அனைவரது கருத்து ஆகாதுதான். ஆனால் கடவுளரின் சக்தி என்பது மாறாதது மாற்ற முடியாது. இந்துக்கள் இதை உணராமல் அறியாமையால் இவ்வாறு நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அனைவரும் கடைப்பிடிப்பதால் தவறான ஒன்று சரியானதாகி விடாது பொய்யானதும் உண்மையாகி விடாது மரைக்காயர் ஐயாரே. சரி தாங்கள் சொல்வது போலவே கோயில்களில் உள்ள கடவுள்களின் சக்தி இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர் வேறுபடுகிறதென்றே வைத்துக் கொண்டாலும் இறைவன் தானேவிரும்பி தான் அவ்வாறு வீற்றிருக்க முடியுமே தவிர வேறு யாரால்தான் கட்டுப்படுத்தி வைக்க முடியும்? சிந்தியுங்கள்.

ஐயாரே இறைவனிடம் நமக்கு தான் தேவையிருக்கிறதே தவிர இறைவனுக்கு எம்மிடம் எந்த தேவையும் இல்லை. இப்படியிருக்கும் போது இறைவனை கட்டாயம் வணங்கவேண்டும் என்றும் அவனை வணங்காதவிடத்து மறு உலகில் தண்டனை வழங்கப்படும் என்பது எதற்காக? அப்படி பயமுறுத்தி இறைவன்/அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி ஒருவர் இறைவனை வணங்க வேண்டும் என்று வற்புறுத்துவது/ நிர்ப்பந்திப்பது எதற்காக? மட்டுமல்லாது ஸயீத் ஐயா இப்படி சொல்கிறார்,

//"என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும்
சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்"எழில்.

தவறு அனைத்து சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒன்று. இறைத்தூதர் என்றால் எதோ இராஜங்கப்பதவி ஒன்றுமில்லை ஒரு மனிதருக்கு இறைவனைப்பற்றி அறிவிக்க கிடைக்கும் ஒரு பாக்கியம் அவ்வளவே. அவர்களிடத்திலும் அவர்களின் பொறுப்புப்
பற்றி விசாரிக்கப்படும்
.//

இறைவனைப் பற்றி சமுதாயத்திற்கு தெறிவிக்க வருபவர் ஏன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும்? , ஏன் அவர்களின் பொறுப்பு பற்றி விசாரிக்க வேண்டும்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் (Sales Ref.) தமது நிறுவனத்தின் விற்பனைப் பொருளை சந்தைப்படுத்த சென்று மக்களுக்கு அப்பொருள் பற்றி அச்சமூட்டி (அதாவது அப்பொருளை பயன் படுத்தினால் கேடு விளையும் என்று அறிவித்த பின்பும்) அதை பலவந்தப்படுத்தி எத்தனை பொருள்கள் விற்பனைசெய்தீர்கள் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் படி நிறுவன உரிமையாளர்/பொது முகாமையாளர் உத்தரவிடுவதைப் போன்றல்லவா இருக்கிறது? அதிலும் பொருட்களை/ கூடுதலான பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் விசாரனை கமிஷன், தண்டனை எல்லாம் வேறு.

இறைவனைப் பற்றி தெரியப்படுத்த எதற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும்?

//..இந்துமதத்தில் இறைவனை கட்டாயம் வழிபட வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்டது இதுதான் " உனக்கு இறைவனை வழிபட விருப்பம் இருந்தால் அவனை வழிபடு இல்லை என்றால் இறைவன் உன்னை'நீ என்னை வழிபடுஎன்று கெஞ்சப்போவதில்லை.'..நீஉனது கடமைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருந்தால் என்னை ஒரு கணம் நினைத்தாலே போதும் இதை விட வேறொன்றும் தேவையில்லை
என்கிறது இந்து மதம்."//
இந்து மதத்திற்காக இந்த சட்டங்களை இயற்றியது யார்?
என்று தாங்கள் கேட்டதற்கு நான் சொன்னது


//இது முற்றிலுமாக நான் உணர்ந்த உண்மை தவிர சட்டம் அல்ல. இவ்வாறு உணர வேண்டிய விடயங்கள் இந்து மதத்தில் நிறைந்து கிடக்கின்றன இவற்றை உணர்ந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அன்றி இந்து மத நூல்களை கற்றுவிட்டால் மட்டும் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.//
இதையும் அவர் எனது சொந்தக்கருத்து என்று நிராகரித்து விட்டார்

ஐயா மரைக்காயரே இறைவனே உணரப்பட வேண்டியவன் என்று தான் இந்து மதம் சொல்கிறது. வேதங்களோ, வேறு நூல்களோ ஒவ்வொரு பொருளையும் இறைவனாகிய பிரம்மம் இது அன்று, இது அன்று, இதுவும் அன்று என்று தான் கூறுகின்றதே தவிர இது தான் பிரம்மம் என்று வறையறுத்து சொல்லவில்லை. இறைவன் அவ்வாறு வரையறுக்கவும் முடியாதவன்.

அப்படி வறையறுத்து சொல்ல முடியாதவனை நாம் அடைய வேண்டுமானால் முதலில் அவனைப்பற்றி உணரவேண்டும். அவனை உணர்வது என்றால் எமது புலண்களால் உணரப்படும் உணர்வு அல்ல. அது ஆத்மார்த்தமான ஞானத்தினால் உணரப்படும் உணர்வு அங்கே புலண்களுக்கு இடமில்லை. இவ்வாறு இறைவனை உணர்வதற்கு வேதங்களும் ஏனைய நூல்களும் வழிகாட்டுகின்றன. ஆனால் அவற்றை கற்று விட்டால் மட்டும் இறைவனை உணர்ந்துவிட முடியாது அவை சொல்லும் வழியில் நாம் சிந்தித்து தெளிவு பெற்று கற்றதுக்கேற்ப ஆன்மீக வழியில் ஒழுகினால் மட்டுமே இறைவனை உணரமுடியும். அவ்வாறு இறைவனை அடைவதே உணரப்பட வேண்டியது என்றால் ஏனைய அனைத்து விடயங்களும் அப்படித்தான் இருக்க முடியும். நாம் எதையும் இலகுவில் கற்றுவிடலாம் ஆனால் அதனால் எதையும் அடையமுடியாது. ஐயம் தீர கற்றதை உணர்ந்து கற்றதன் படி ஒழுகினால் தான் கற்றதனால் பயன் . இது எல்லா வகையான கல்விக்கும் பொருந்தும். நீங்கள் பெருமையுடன் சொல்கிறீர்களே இந்து மத வேதங்களைக் கற்றுணர்ந்து அதில் விற்பன்னரான "சஞ்சய் த்விவேதி ஆச்சாரியா" என்பவர் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் என்று அவர் வேதங்களை கற்று மட்டுமே இருக்கிறார் கற்று உணர்ந்து இருந்தால் அவர் இன்று மதம் மாறியிருக்கமாட்டார். இதிலிருந்தே தெரிகிறது அவர் வேதங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார் என்று

இறைவழிபாடு பற்றி ஒரு கதை இருக்கிறது

பிரம்மாவின் புதல்வரான நாரதர் என்ற தேவ ரிஷி இருக்கிறார். அவர் சதா சர்வ காலமும் நாராயனின் நாமத்தை ஜபித்துக்கொண்டு இருப்பார். ஒருமுறை அவர் நாராயனிடம் சென்று சதா சர்வ காலமும் தங்களின் பெயரை ஜபிக்கும் என்னை விட சிறந்த பக்தன் இந்த பதிநான்கு உலகிலும் கிடையாது என்று ஆணவ மேலீட்டுடன் கூறினார் அதற்கு நாராயனன் சிரித்துவிட்டு உன்னை விட சிறந்த பக்தன் பூவுலகில் இருக்கிறான் என்றார். அப்போது நாரதர் கேட்டார் அவன் யார்? அவன் தினமும் எத்தனை தடவை தங்களை நினைக்கிறான் என்று ? நாராயனன் அதற்கு அவன் ஒரு வறிய குயவன் அவன் காலையில் நித்திரைவிட்டு எழும்போது ஒருதடவை என்னை நினைப்பான். பிறகு தனது தொழிலை பார்க்க சென்று விடுவான் தனது கடமைகளனைத்தினையும் முடித்து இரவு நித்திரைக்கு செல்லுமுன் ஒரு தடவை என்னை நினைப்பான் இப்படியாக அவன் என்னை தினமும் இரண்டு தடவை நினைக்கிறான் அவனே எனது சிறந்த பக்தன் என்றார். நாரதர் அதற்கு நான் தினமும், எந்நேரமும் தங்களைத்தான் நினைக்கிறேன் அப்படியிருக்க தினமும் இரண்டு தடவை மட்டுமே தங்களை நினைப்பவன் எப்படி என்னைவிட சிறந்த பக்தனாக முடியும்? நான்தான் சிறந்த பக்தன் என்றார். நாரதரின் கர்வத்தை அடக்க நினைத்த நாராயனன் ஒரு நாள் நாரதரை அழைத்து ஒரு கிண்ணம் நிரம்பி வழிய எண்ணையை ஊற்றி அதை நாரதரிடம் கொடுத்து ஒரு சொட்டு எண்ணைகூட நிலத்தில் சிந்தாதவாறு உலகம் முழுக்க நடந்து சுற்றி வர வேண்டும் என்று பணித்தார். நாரதரும் எண்ணைக் கிண்ணத்தை கவணமாக கொண்டு வழியில் சந்திப்பவரை எல்லாம் "விலகும் விலகும் எண்ணை சிந்திவிடப் போகின்றது" என்று கூறிக்கொண்டு வெற்றிகரமாக ஒருதுளி எண்ணை கூட நிலத்தில் சிந்தாதவாறு நாராயனிடம் சென்று " நான் வெற்றிகரமாக தாங்கள் சொன்னதைப் போல் செய்துவிட்டேன்" என்றார். நாராயனனோ புன்னகையுடன் " இன்று எத்தனை தடவை என்னை நினைத்தாய்? " என்று கேட்டார். பேந்தப் பேந்த விழித்த நாரதர் " இன்று தான் நீங்கள் எனக்கு வேலை தந்துவிட்டீர்களே அதனால் இன்று உங்களை நினைப்பத்ற்கு நேரமிருக்கவில்லை" என்றார். நாராயனன் " இப்பொழுது தெரிகிறதா யார் சிறந்த பக்தன் என்பது ?" என்று கேட்டார் நாரதரும் தனது கர்வத்தை உணர்ந்து திருந்தினார்.

இதிலிருந்து நமது கடமை தான் முதலில் என்றும் இறைவழிபாடு என்பது அடுத்தபடிதான் என்பதும் நன்கு புலப்படுகிறது. அத்துடன் இந்துமதத்தில் இறைவனை வழிபடாவிட்டாலும் அவனுக்கு எந்த உலகத்திலும் தண்டனை கிடயாது. அதேபோல் இறைவனை எப்படி வழிபட்டாலும் ஒருவன் செய்கின்ற பாவங்களுக்கு எந்தவித மன்னிப்பும் கிடயாது அவன் செய்த வினைப்பயனை அவன் அனுபவிப்பான். ஏனென்றால் இறைவன் மனிதனுக்கு ஆறறிவைப் படைத்துள்ளான் நன்மை எது தீமை எது என்று மனிதனுக்கு தெரியும். மனிதன் சிந்தித்து அதன் படி அவன் நன்மை செய்தால் மறு உலகிலும் அடுத்தபிறவியிலும் சுகத்தையும் தீமைசெய்தால் மறு உலகிலும் அடுத்தபிறவியிலும் துன்பத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். கூடவே மன்னிப்பு என்பது மீண்டும் தவறு செய்ய உந்துதலாக இருக்கும். இந்த கன்மம் எனப்படுகின்ற இருவினை (நல்வினை, தீவினை) எப்போது களையும் என்றால் இறைவனை அடையும் போது இவை களைந்து விடும். இவ்வாறு இந்த வினைகள் அற்றுப்போகும் போது மீண்டும் பிறவி என்பது அற்றுப்போகும்.

இந்த இரு வினைகள் பற்றியும், இறையுணர்வைப் பற்றியும், இறைவனை உணர்ந்தவர், அவரின் குணங்கள், அவரை எப்படி இனங்காண்பது, எவ்வாறு பற்றியும் வேறு ஒரு பதிவில் விளக்குகிறேன்.

அடுத்து கோயில்களில் காசு வசூலிப்பது கோயில் பரிபாலனத்திற்கு தானே அன்றி இறைவன் தரிசனத்திற்காக அல்ல. தவிரவும் காசு வசூலிப்பதனால் கட்டுப்படுத்தப் படுவது பக்தர்கள் தானே அன்றி இறைவன் அல்ல. கோயில்களில் " இறைவா நீ எனது அனுமதி இன்றி யாருக்கும் தரிசனம் கொடுக்க கூடாது, நீ பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதானால் என்னிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க உன்னை அனுமதிக்கமாட்டேன்" என்று இறைவனிடமா பணம் வசூலிக்கிறார்கள்? கோயில் நிர்வாகிகள். இல்லையே, பக்தர்களிடம் தானே கேட்கிறார்கள்?

அறிவுடைநம்பி ஐயா அவர்களே இறைவன் ஒன்றும் கருவறைக்குள் ஒழிந்து கொள்ள வில்லை அவனுக்கு அந்த அவசியமும் இல்லை. மனிதர்கள் எமக்கெல்லாம் கூட ஒரு வீடு இருக்கிறது இறைவனுக்கு ஒரு வீடு வேண்டாமா? அதற்காகத்தான் கோயில், கருவறை எல்லாமே. நீங்கள் உங்கள் வீட்டில் வசிக்கிறீர்கள் என்பதற்காக "வீட்டில் ஒழிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகுமா? " அத்துடன் கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்பது திருமூலர் அருட்பாடல். அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, இடச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது. இன்னும் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஐயா ஆகமம், ஐதீகம் எல்லாம் கட்டுப்பாடுகள் அகாது. அத்துடன் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு, மஹாகும்பாபிஷேகத்தால் பிரதிட்டை செய்யப்பட்டு, காலங்காலமாக ஆகம முறைப்படி நித்திய, நைமித்திய, கிரியைகள் நடைபெறும் கோயில்களில் பரந்துபட்ட அன்பும் அருளும் உடைய இறைவன் மந்திரங்கள் மற்றும் கிரியைகள் மூலம் ஆற்றுப்படுத்தப் படுகிறானே தவிர கட்டுப்படுத்தப் படுவதில்லை. அறிவுடை நம்பி ஐயா அவர்களே தாங்கள் நினைப்பது போல் ஒரு நாளைக்கு மாத்திரம் இறைவனை இடம் மாற்ற முடியாது. ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் ஆகம முறைகள் மீறப்படுமாயின் நாட்டுக்கும், அரசனுக்கும் தான் கேடாகும் தவிர இறைவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை இதனால் ஆகம கட்டுப்பாடுகள் கூட இறைவனுக்கு அல்ல மனிதர்களுக்குத்தான் என்பது நன்கு புலப்படுகிறது. ஆகமத்தில் இடமிருப்பின் நீங்கள் சொல்வதுபோல் ஐயானாரையும், முனியாண்டியையும், சுடலை மாடனையும் நீங்கள் விரும்பும் கோயில்களில் வைக்கலாம், ஆகமத்தில் இடமில்லையெனில் நீங்கள் விரும்பும் கோயில்களுக்கு அன்மையில் புதிய கோயில்களை கட்டலாம். அதிகம் தேவையில்லை எனக்கு தெரிந்து பெரும்பாலான கோயில்களில், ஆகம முறைப்படி அமைந்த கோயில்களிலும் கூட ஐயானார், முனியாண்டி சுவாமி, கருப்பு சுவாமி போன்றோர் வீற்றிருப்பதைக் காணலாம்.

//சூத்திரன் காலனிக்குள் பார்ப்பன சாமிகள் வந்தால் கடவுளும் தீட்டாகி விடுவான் என்றானே சுப்பிரமணி. இதெல்லாம் கடவுளைக் கட்டுப்படுத்துவதாகாதா?//

இதெல்லாம் சுத்தமான அறியாமை. இறைவன் ஒருபோதும் தன் குழந்தைகளை பிரித்துப்பார்க்க மாட்டான். இவற்றினால் எல்லாம் இறைவனது பரந்துபட்ட அன்பும், கருணையும், அருளும் கட்டுப்படுத்தப் படுகின்றதா இல்லையே?

ஸயீத் ஐயா அவர்களே நாத்திகம் கூட இந்துமதத்தின் ஒரு உட்பிரிவு என்பதை தாங்கள் அறியாதவர் என்று நினைக்கிறேன். அதாவது வேத காலத்திலேயே எழுந்த உலகாயதத்தத்துவம் (சார்வாகத் தத்துவம்) இது இந்துமதத்தின் ஒரு உட்பிரிவாகவே கருதப்படுகிறது, இதை பிரஹஸ்பதி முனிவர் தோற்றுவித்தார் என்றும் சார்வாகமுனிவர் தத்துவரீதியாக பரப்பினார் என்றும் கூறப்படுகிறது. (வீர சாவர்க்கர் கூட நாத்திகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது).

இறைவனைப் பற்றி உணர்வதற்கு வேத, ஆகம, மற்றும் பல நூல்கள் வழிகாட்டுகின்றன. அதனால் அவ்வழியில் உணரப்படும் இறையுணர்வும் உண்மையாக காணப்படும். வழிகாட்டும் நூள்கலானவை தவறானவையாக இருக்கும் போது உணரப்படும் பொருளும் உண்மையற்றதாகிவிடும் இந்த நிலைமையே நாத்திகர்களின் நிலைமையாகி இருக்கின்றது.

இதன் மூலம் நாம் அறிவதெல்லாம் இறைவனனானவன் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அவன் கட்டுப்படுவதெல்லாம் உண்மையாண, தூய்மையான, தன்னலமற்ற அன்புக்கு மட்டுமேயன்றி வேறெதெற்கும் அல்ல என்பதும் நன்கு புலப்படுகிறது.

இந்தப்பதிவின் மூலம் யார் மனதயும் புண்படுத்தும் எண்ணமோ அல்லது யாரையும் குத்திக்காட்டும் எண்ணமோ கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: